Sunday 6 April 2014

என்ன மாயமோ?

-நீதிபதி மூ..புகழேந்தி-



என்ன மாயமோ?
ஏதும் புரியவில்லை.
இதயம் வெடித்துச் சிதறுதடா! – மனிதா,
இதென்ன வென்று தவிக்குதடா! – அந்த
விண்வழிச் சென்ற விமானம்
என்ன ஆனதோ? விந்தையடா!

ரைட் சகோதரர்கள்
இதையா நினைத்தனர்?
நினைத்து இருந்தால் மாட்டாரே! - இதனைக்
கண்டு பிடித்திருக்க மாட்டாரே! - இந்தக்
கவலைகள் நமையண்டச் செய்யாரே!
துன்பம் நெஞ்சை ஒட்டாதே!

எல்லாம் உயிர்களும்
மனித உயிர்களே!
என்ன ஆனதோ அவையெலாம்? - அடடா!
உறவின ரெல்லாம் நொந்தனரே! – அந்த
உறவுகள் மீண்டும் வந்திடுமோ?
உலகினர் கவலைதாம் மாய்ந்திடுமோ?

கடலில் விழுந்ததோ?
மலையில் இடித்ததோ?
மாயத்தில் மாயமாய்த் தோணுதடா! – நம்
மனமெலாம் மயங்கிப் போகுதடா! – அந்த
இறைவனைக் காணநான் புறப்பட்டேன்
இருப்பிடம் சொலும்வரை விடமாட்டேன்!

(சமீபத்தில் காணாமல் போன மலேசிய விமானம் குறித்து)

படத்துக்கு நன்றி: http://www.themalaymailonline.com

Saturday 22 March 2014

நடிகர் ராதா ரவி அவர்களுடன் நான்


நீதிபதி மூ.புகழேந்தியின் வாழ்க்கைக் குறிப்பு



பெயர்          - நீதிபதி புகழேந்தி                                                                                

கல்வி          - கல்லூரிகள் தேசியக் கல்லூரி, திருச்சி & சென்னை சட்டக் கல்லூரி

பணி             - முன்னாள் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி

பெற்றோர்  - மூக்கையன் & அழகம்மாள்

முகவரி       -  எண்.6, முதல் தெரு, எழிலோவியம், குறிஞ்சி நகர், மேற்கு தாம்பரம், சென்னை - 600045.

என்னைப் பற்றி

பட்டமும் சட்டமும் படித்து தலைமைச் செயலகத்தில் பணியாற்றிய நான், 1982இல் மயிலாடுதுறையில் குற்றவியல் நீதிபதியாகப்  பொறுப்பேற்றுப் படிப்படியாகப் பதவி  உயர்வு பெற்று  மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாகி 2007 செப்டம்பரில் ஓய்வு பெற்றேன்.

நான் திருச்சி  தேசியக் கல்லூரியில் படித்த போது நடந்த  இந்திய பாகிஸ்தான் போர் குறித்து எழுதிய என் முதல் கவிதை 26.09.1965 அன்றைய சுதேசமித்திரன் நாளிதழில் வெளியானது. அன்று முதல் தொடர்ந்து என் பணிகளுக்கு இடையில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் தொடர்ந்து எழுதி வருகின்றேன். நீதித் துறையில் இருந்துகொண்டு வேதநாயகம் பிள்ளையைப் போன்று  கவிதை, புதினங்கள் என்ற இருநிலைகளையும் தொட்டு, படைப்பிலக்கியவாதியாக, நூல்கள் வெளியிட்டு இலக்கியப் பணியாற்றி வருகிறேன். நீதித் துறையில் என்னை ஊக்குவித்து என் நூல்களை வெளியிட்டுப் பெருமை சேர்த்தவர் மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதியரசர் திரு. ச.மோகன் அவர்கள். கவிஞர். திரு பொன்னடியானின் முல்லைச்சரமும் கடற்கரைக் கவியரங்கமும் என் பயிற்சிக் களங்கள்.

கடந்த 50 ஆண்டுகளில் கவிதைகளும் புதினங்களுமாக நான் எழுதிய 14 நூல்கள் வெளிவந்துள்ளன.

கவிதை நூல்கள்

1. ஓர் ஊமைக் குயிலின் உணர்ச்சிக் கோலங்கள்     (1984)
2 பார்வை ஒரு பல்கலைக்கழகம்                                   (1988)
3. மகரந்தப் பயணம்                                                             (1992)
4. ஆஞ்சநேயர் அருள் வெண்பா                                      (1996)
5. அருள் முருகன் திருவெண்பா                                       (2004)
6. மயிலழகன் மணமலர் வெண்பா                                  (2007)
7. திருவாலீசுவரன் திருவெண்பா                                     (2008)
8. வான் படுக்கை                                                                   (2009)
9. நீதிபதி புகழேந்தியின் புதுமைக் கவிதைகள்          (2012)    
10. காதல் பேசும் கடிதங்கள்                                              (2012)

நாவல்கள்

11. அதிசய மலர்                                                                       (2003)
12. வைரநிலா                                                                         (2007)
13. வேதமானவன்                                                                  (2010)

ஆங்கிலம்

14. The Glittering Man                                                                       (2011)

சென்னையில் 1975 நவம்பரில் நடந்த முதல் தமிழ்க் கவிஞர் மாநாட்டில் பங்கேற்றுக் கவிதைப் பாடியுள்ளேன். புதுவையில் பாரதியார் நூற்றாண்டு விழாவில் கவிதாஞ்சலி செலுத்தியதற்கு 13.12.1981இல் பாரதிப் பட்டயம் பெற்றுள்ளேன். திருவாரூரில், பாவேந்தர் நூற்றாண்டு விழாவில் 1991இல்,இயற்றமிழ்ப் பயிற்றக சரவணத் தமிழனரால் ‘பார்வைப் பாவலர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. கவிஞர் பொன்னடியான் 50 வது இலக்கிய விழாவில் ‘இலக்கியப் பேரொளி’ என்ற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது. 09.01.2013 அன்று என் 4 நூல்கள் வெளியீட்டு விழாவில் உரையாற்ற வந்த சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் முனைவர் தங்க பழனிவேல், என்  கவிதைகளில் வள்ளலார் கருத்துகள் நிறைந்திருப்பதாகக் கூறி ‘அருட்பெருங் கவிஞர்’ என்ற பட்டத்தையும் வழங்கியுள்ளார். சென்னையில் இயங்கி வரும் மனிதநேயச் செம்மல் மலேசியா எஸ்.பழனிவேல் நினைவு அறக்கட்டளை, பாரதிதாசன் விருது அளித்துச் சிறப்பித்தது.

‘இந்தியன் ஏஜ்’ ஆங்கில மாத இதழில் தொடர்ந்து பல்வேறு கருத்துகள் குறித்துக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறேன். சாகித்திய அக்காதெமி, நெய்வேலித் தமிழ்ச் சங்கம் உள்பட பல்வேறு இலக்கிய அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் உரையாற்றி வருகின்றேன். முத்தமிழ்க் கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் அவர்களின் புதல்வன் முனைவர் மோ.பாட்டழகன் அவர்களை ஆசிரியராகக் கொண்ட ‘வெற்றி முனை‘ என்ற மாத இதழின் முதன்மை ஆசிரியராகச் செயல்பட்டு வருகின்றேன்.

2014, எனது இலக்கியப் பணியின் பொன் விழா ஆண்டு. இந்த ஆண்டில் இந்த வலைப்பதிவு மூலமாக வாசகர்களைச் சந்திப்பதில் மகிழ்கிறேன்.